சென்னை: வருவாய்த்துறை மூலம் மாதம் 1,000 ரூபாய் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை 1,500 ரூபாயாக வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், அனைத்து வகையான மாற்றுதிறனாளிகளின் சங்கங்களை சார்ந்த 18 ஒருங்கிணைப்பாளர்கள் இன்று (டிச.7) முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் தீபக், 11 ஆண்டுகளாக வைத்து வந்த கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்துள்ளார்.
அவருக்கு நேரில் சந்தித்து நன்றி கூறியது மகிழ்ச்சி என்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம் என தெரிவித்த அவர், அதையும் கனிவோடு பரிசீலிப்பதாக முதலமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு