சென்னை: இந்தியத் திரையுலகின் பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் சங்கர். இவர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க ஆயத்தமாகியுள்ளார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. ஹிந்தியில் அந்நியன் படத்தை ரீமேக் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் சங்கர் இயக்கவுள்ள படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதப் போவதாக செய்திகள் வெளியானது. அந்த நேரத்தில்தான் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இதனால் சங்கரின் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜின் கதை வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் அவரிடம் தெரிவித்தனர்.
புதிய சர்ச்சை
இருப்பினும் கார்த்திக் சுப்புராஜிடம் ராம்சரண் படத்துக்கான கதையை வாங்கி வேலைகளை ஆரம்பித்துவிட்டார் சங்கர். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் சங்கருக்கு கொடுத்த கதை அவருடைய உதவியாளர் ஒருவருடையது என்பது தெரியவந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜிடம் உதவியாளராக இருந்த செல்லமுத்து, ராம்சரணை வைத்து சங்கர் இயக்கும் படத்தின் கதை தன்னுடையது என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படத்திலேயே ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த சங்கருக்கு மேலும் ஒரு சோதனையாக வந்துள்ளது, இந்த கதை திருட்டு பஞ்சாயத்து.
இதையும் படிங்க: இந்தியன் 2 வழக்கு: தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட அனுமதி