தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிய கலந்தாய்வு முதலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறுகையில், “முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு வகுப்பறை, மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ஆகியவைகள் குறித்து அறிமுகங்கள் அளிக்கப்படும்.
குறிப்பாக மாணவர்களுக்கு உடலியல் பிரிவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தங்களின் உடலை தானமாக அளித்து அவர்களுக்கு தரவேண்டிய மரியாதை குறித்தும் விளக்கப்படும். 2020-21 கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கப்படும். மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களும் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
தேசிய தேர்வு முகமையிலிருந்து மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு கலந்தாய்வின்போது சரிபார்க்கப்பட்டன. அந்த விவரங்கள் அனைத்தும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் சரிபார்க்கப்படும். அப்போது, மாணவர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய கைரேகைகள், கருவிழி சோதனை, புகைப்படம் போன்றவை பெறப்படும். மாணவர்கள் கலந்தாய்வில் முறைகேடு செய்திருந்தால் இதன் மூலம் கண்டறிய முடியும்.
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்வதை தடுப்பதற்காக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான அச்சத்தைப் போக்க தனித்தனியாக மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பேராசிரியர்களால் கண்காணிக்கப்படுவார்கள்.
மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க அறிவுரை வழங்கியுள்ளோம். வகுப்பறைகளில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம். மாணவர்கள் பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் கரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வெளிமாநில மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவது கட்டாயம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு