கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இதனிடையே பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வருமாறு சில தனியார்கள் பள்ளிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து சென்னை, மதுரை உள்பட பல இடங்களில் தனியார் பள்ளிகள் பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களை அழைத்து வகுப்புகள் நடத்துவதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
மேலும் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வகுப்புகள் நடப்பதாக புகார் வந்ததையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொலைபேசியில் அழைத்து இயக்குநர் கருப்பசாமி கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அரசு உத்தரவை மீறி பள்ளிகளை திறந்து, வகுப்புகளை நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயக்குநர் கருப்பசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மதுரையில் செயல்படும் பள்ளி குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரவும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவில் குஷ்பூ: பிளான் என்ன?