சென்னை: பத்தாம் மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலைத் தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து அளிக்க வேண்டும் எனவும், தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழின் அடிப்படையில் தான் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பதால் தேர்வரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தேர்வரின் பெற்றோரின் முன்னிலையில் தயார் செய்து உரியப் படிவத்தில் கையொப்பம் பெறுதல் வேண்டும். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின்னர் திருத்தங்கள் கேட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பக்கூடாது எனவும் அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "2023-2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு EMIS-ல் (Education Management Information System) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த தகவல்களைப் பயன்படுத்தியே 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. எனவே அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான EMIS உள்ள தங்களின் பள்ளி மாணவர்களின் தகவல்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து திருத்தங்கள் இருந்தால் உடனே திருத்தம் செய்ய வேண்டும்.
மாணவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் பிறந்த தேதியைப் பிறப்பு சான்றிதழுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட உள்ளதால் சரியான எண்ணைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் EMIS Portal-ல் தங்கள் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர் 1 முதல் 10 ம் வகுப்பு வரையில் ஒவ்வொன்றையும் எந்த பயிற்று மொழியில் பயின்றார் என்ற விபரத்தை தனித்தனியே பதிவேற்றம் செய்திட வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து தேர்வர்களும் பகுதி ஒன்றில் தமிழ் மொழியை மட்டுமே மொழிப்பாடமாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
தமிழ்நாட்டிலேயே பிற பாடத்திட்டத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற பாடத்திட்டத்தில் பயின்று தமிழ் மாநிலப் பாடத்திட்டத்திற்கு நேரடியாக 9 மற்றும் 10ஆம் வகுப்பில் சேர்கின்ற மாணவர்களுக்கு மட்டும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி ஒன்றில் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதில் இருந்து 2023-2024ஆம் கல்வியாண்டு வரையில் விலக்களிக்கப்பட்டுள்ளது.
EMIS Portal-ல் பதிவேற்றம் செய்யப்படும் மாணவர்களின் விபரங்களில் தவறுகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாட வாரியாக தேர்வு அட்டவணை!