சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் யானை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. படத்தில் தீவு, மார்க்கெட் காட்சிகளில் படத்தின் பிரமாண்டத்தை கண் முன் வந்ததில் பாராட்டுக்களை பெற்று வருகிறார் கலை இயக்குநர் மைக்கேல்.
இது குறித்து மைக்கேல் கூறுகையில் … யானைக்கு கிடைத்து வரும் பாரட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இது பல நாள் கனவு .எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரம். சிறுவயதில் இருந்தே ஓவியக்கலையின் மேல் ஒரு ஈர்ப்பு எனக்குள் இருந்தது, அதனோடு சேர்ந்து சினிமாவின் மேலும் ஒரு ஈர்ப்பு எனக்குள் இருந்தது. அதனால் சென்னையில் உள்ள கல்லூரியில் அது சம்பந்தபட்ட கல்லூரி படிப்பை படிக்க ஆரம்பித்தேன்.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு சினிமா துறைக்கு முக்கியமான பிரிவான CG பிரிவில் சில காலம் பயிற்சி எடுத்தேன், அந்த பயிற்சியின் போது, கோச்சடையான் படத்திலும் 3 மாத காலம் பணி புரிந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் ஆபீஸில் பணிபுரிவது பிடிக்கவில்லை.
கலை இயக்கம் துறையில் பணிபுரியலாம் என முடிவெடுத்து எனது குருநாதர் கலை இயக்குனர் முத்துராஜிடம் 'ஐ' திரைப்படத்தின் போது உதவியாளராக சேர்ந்தேன். கலை இயக்கத்தில் எல்லாவற்றையும் அவரிடம் தான் கற்றுக்கொண்டேன் அதன் பிறகு புலி, தெறி, ரெமோ, வேலைக்காரன் என தொடர்ந்து அவர் படங்களில் பணிபுரிந்தேன்.
அதன் பிறகு தனியாக பணிபுரியலாம் என வாய்ப்பு தேடி கொண்டிருந்த போது இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் அவருடைய “கொம்பு வச்ச சிங்கமடா படத்திற்கு பணியாற்ற என்னை அழைத்தார். அந்த படத்தில் பணியாற்றினேன். பின்னர் சினம், எஃகோ, ஓ மை டாக், போன்ற படங்களில் பணியாற்றினேன்.
"சினம் மற்றும் ஓ மை டாக்' திரைப்படம் ஒளிப்பதிவாளர் கோபிநாத் மற்றும் அருண்விஜயுடன் சேர்ந்து பணிபுரிந்தேன். இதன் மூலம் தான் யானை திரைப்படம் எனக்கு கிடைத்தது. அதன் பிறகு இப்போது ynot studios-ல் சமுத்திரகனியின் 'தலைக்கூத்தல்' என்ற படத்தில் பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து பல படங்களில் இப்போது பணியாற்றி கொண்டு இருக்கிறேன்.
நான் கலை இயக்கம் வர காரணம், ஆக்கபூர்வமான பணிகளை எப்பொழுதும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான். நான் தனியாக பணியாற்ற ஆரம்பித்த பிறகு, சிறப்பான பணியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பணிபுரிந்தேன். யானை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் வீடு, அதில் வரும் தீவு, அங்கு இருக்கும் கடைத்தெரு, ஆர்ச் என அனைத்தும் நாங்கள் போட்ட செட் தான்.
யானை படத்தில் நிறைய செட்கள் இருக்கின்றது. ஆனால் யாரும் கண்டுபிடிக்க முடியாத படி இருக்கும். இப்போது திரைத்துறையில் எல்லோரும் பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. கலைத்துறையை பொறுத்தவரை நாம் சிறப்பாக பணிபுரிந்தாலும் , பார்வையாளர்கள் கண்ணில் படமாட்டோம். அது கொஞ்சம் வருத்தம் தர கூடிய ஒன்று தான். ஆனால் நாம் ஒரு இயக்குனரின் கற்பனையை உயிர்கொடுக்க உழைக்கிறோம் என்பதில் சந்தோசம் என்றவர், யானை படம் குறித்து கூறியபோது "ஹரியுடன் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். தயாரிப்பாளரின் பணம் வீணாக கூடாது என்பதற்காக வேகமாக உழைப்பவர். அவருடைய வேகத்திற்கு மொத்த குழுவையும் அழைத்துசெல்வார். முன் கூட்டியே அனைத்தையும் திட்டமிட்டுவிடுவார். நேரத்தை வீணடிக்கவே மாட்டார் அவர். அவருடைய அனுபவம் நமக்கு பெரிய பாடமாக இருந்தது.
யானை படத்தில், வில்லன் வீட்டின் உடைய வெளிப்புற தோற்றம், படத்தில் வரும் மார்கெட், பார் பைட் சீனில் சில மாற்றங்கள்,ரைஸ் மில் இடத்தில் சில மாற்றங்கள், என குறிப்பிட்ட காட்சிகளில் செட் பணிகளை செய்துள்ளோம். யானை படத்திற்கு பிறகு திரைத்துறையில் நிறைய வாய்ப்பு வருகிறது.
கலை இயக்கத்தில் நிறைய சாதிக்க வேண்டும், ஃபேண்டஸி, ஹிஸ்டாரிகல் படங்கள் என பணிபுரிய வேண்டும், பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எனக்கு பக்கபலமாக இருப்பது என் குடும்பத்தினர் என்கிறார் கலை இயக்குநர் மைக்கேல்.
இதையும் படிங்க:‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் பட்டியல் வெளியானது; நாளை முதல் இசை