சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இளநிலை பட்டப்படிப்புகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், சேராமல் காலியாக உள்ள 9,820 இடங்களில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நேரடியாக மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்தி அறிவித்துள்ளார்.
2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி நேரடி வகுப்புகள் துவக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டன.
164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத்தொடர்ந்து சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு, முதல்சுற்று கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 30ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கலந்தாய்வின் மூலம் 84899 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களில் 36626 மாணவர்கள், 48273 மாணவிகளும் ஆவார்கள். அரசுப் பள்ளிகளில் படித்த 23295 மாணவிகளும் இதில் அடங்குவர். இந்த நிலையில், கல்லூரியில் காலியாக உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக மாணவர்களை ஜூலை 4 ஆம் தேதி 7ஆம் தேதி வரையில் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 164 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ந்த பின்னர் தேவைப்படும் கல்லூரிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் இடம் வழங்கியது உட்பட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 மாணவர்கள் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 224 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49 ஆயிரத்து 965 மாணவர்களும், 56 ஆயிரத்து 259 மாணவிகளும் அடங்குவர். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் 'புதுமைப்பெண்' திட்டத்தில் நிதி உதவி பெறுவதற்கு தகுதி பெற்ற 27 ஆயிரத்து 775 மாணவிகளும் சேர்க்கப்பட்டனர். நடப்பாண்டில் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 9 ஆயிரத்து 820 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படாமல் உள்ளனர்.
ஆக.21 முதல் நேரடியாக மாணவர் சேர்க்கை: இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்தி இன்று (ஆக.16) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் வரும் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA 2023-UG VACANCY” என்ற தொகுப்பில் காணலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் வன்முறை.. நன்னெறி வகுப்புகள் வன்முறையை வேரறுக்குமா? - கல்வியாளர்கள் கருத்து!