17ஆவது மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5.38 விழுக்காடு வாக்குகள் மட்டுமே அமமுகவுக்கு கிடைத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "300-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனது குடும்ப உறுப்பினர்கள் 100 பேருக்கு மேல் வாக்களித்தும் 14 வாக்குகள் மட்டுமே ஒரு வாக்குச்சாவடியில் அமமுகவுக்கு பதிவாகியுள்ளது.
இதுபோன்ற சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம்தான் பதில்சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும்போது எங்களின் சிலீப்பர் செல்கள் யார் எனத் தெரியவரும். ஜூன் 1ஆம் தேதி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.
இதனால் அமமுகவில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படுத்தப்படும். ஒரு தேர்தலின் முடிவை வைத்து ஒரு கட்சியின் தலையெழுத்தை கணிக்க முடியாது" என்றார்.