நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ரசாயனம் பூசப்பட்ட சிலை வைப்பதற்கு அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு எற்படாத வகையில் களிமண், கிழங்கு மாவு, மரவள்ளிக்கிழங்கு, ஜவ்வரிசி கழிவுகள் போன்றவற்றில் இருந்து சிலைகளை தயாரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி சிலைகள் தயாரிக்கப்பட்டது. பைக் விநாயகர், உழவன், கிரிக்கெட் வீரர் என டிரெண்டுக்கு ஏற்றார் போல பல வடிவங்களில் சிலை தயாரிக்கப்பட்டதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவி வழிபாடு செய்து வருகின்றனர். மொத்தம் 2,600 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் சென்னையின் பல பகுதிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பெரவள்ளூரில் இரண்டு டன் கற்றாழைகளைக் கொண்டு விநாயகர், கொளத்தூர் அருகில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சைளால் செய்யப்பட்ட விநாயகர், கொளத்தூர் அருகில் 7,001 சங்குகாளால் அமைக்கப்பட்டுள்ள விநாயகர், ராணுவ உடையில் விநாயகர் என பல விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.