புதியதாக திமுக அரசு பதவியேற்றபோது கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது சவாலான பணியாக இருந்தது. ஆட்சி பொறுப்பேற்கும் முன்பே மு.க.ஸ்டாலின் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பணிகளை வேகப்படுத்தினார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற அன்று 26,465 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. இந்த எண்ணிக்கை மே இரண்டாம் வாரத்தில் 35,000-த்தை எட்டியது. தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை 19,448ஆக குறைந்து உள்ளது.
மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்
மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு அலுவலர்களை நியமித்தார். அதேபோல் அமைச்சர்களை மாவட்ட வாரியாக நியமனம் செய்து, கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தினார்.
கரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு, படுக்கை வசதி, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை உள்ளிட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்து, தற்காலிக மருத்துவர்கள், செவிலியர் ஆகியோரை உடனடியாக நியமனம் செய்தார்.
சென்னையைப் பொறுத்தமட்டில், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் ஆம்புலன்சில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்த நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு வந்தால் போதும் என்று அரசு அறிவித்தது. மற்றவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே சுய தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கரோனா இரண்டாம் அலையினால் புதிதாக பதவியேற்ற அரசு கடுமையாக பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. மே 9ஆம் தேதி கரோனாவை கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்டம் வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மே 10 முதல் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இருந்தும், கரோனா தொற்று மே இரண்டாம் வாரத்தில் 30,000 என்ற எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டு இருந்தது.
மக்களுக்காக நிவாரண உதவித்தொகை
அதனால் உடனே முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டது. உடனே 2.07 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக தலா 2,000 முதல் தவணையாக வழங்கப்பட்டது.
கரோனாவைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் சிறப்பு கரோனா நிவாரண நிதி என்ற திட்டத்தை உருவாக்கி, அனைவரும் பாரபட்சமின்றி நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். பேரிடர் நிதி கரோனா நிவாரணத்திற்கு மட்டும் முழுமையாக உபயோகிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
மே 24ஆம் தேதி தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தினார், மு.க.ஸ்டாலின். அப்போது 13 கட்சிகளைச் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மருத்துவக் குழுவினர் ஆலோசனைக்குப்பின் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 20,000ஆக குறைந்து உள்ளது. அலோபதி மருத்துவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சித்தா மருத்துவத்திற்குத் தரவில்லை என்ற விமர்சனத்திற்குப்பின் 14 சித்தா சிகிச்சை மையங்களுக்கு அரசு அனுமதி அளித்தது.
தடுப்பூசித் தட்டுப்பாடு:
கரோனா தடுப்பூசி குறித்து அச்சம் பொதுமக்களிடம் இருந்ததால், தடுப்பூசிகளை வீண் செய்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.
இரண்டாம் அலை வேகமெடுத்தபோது தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை இலவசமாக தர வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்தன.
குறிப்பாக 18 முதல் 44 வயதிற்குட்பட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டியதால், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசிகளை தயாரிக்கும் உரிமையை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அது மட்டுமில்லாது தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உலகளாவிய டெண்டர் எடுக்கும் பணி குறித்து ஆலோகிக்கப்பட்டது. ஆனால், தடுப்பூசி நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே கொடுப்போம் என கைவிரித்து விட்டன. தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பில் இல்லாததால் பல பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஆய்வு:
கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நேரடியாக முதலமைச்சர் பார்வையிட்டு, கரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக பிபிஇ கிட் உடையணிந்து இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை சந்தித்தார்.
எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை:
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு குறித்து எதிர்க்கட்சிகளிடம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல் முக்கியமான முடிவுகளின்போது எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
பிளஸ் 2 தேர்வு ரத்து குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்தபின் முதலமைச்சர் முடிவு எடுத்தார்.
முழு ஊரடங்கு அமல்படுத்தும் முன்பு இரண்டு நாட்கள் முழு தளர்வு அளித்தது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு போதிய தடுப்பூசிகள் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னைக்கு அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிக அளவிலான தடுப்பூசிகளை முதலமைச்சர் ஒதுக்கினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி கரோனா தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் திமுக சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டினார். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிக அளவிலான தடுப்பூசிகளை ஒதுக்கியதற்குப் பாராட்டு தெரிவித்தார்.
எம்ஜிஆர் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ஹண்டே மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் பாராட்டு தெரிவித்தார்.
தடுப்பூசி மட்டுமே தீர்வு
இதுகுறித்து மருத்துவர் சாந்தி கூறுகையில், "தமிழ்நாடு அரசு தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 3ஆவது அலையைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு. அனைத்துத் தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு வேகம் காட்ட வேண்டும்" என்றார்.
முதலமைச்சர் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்
கரோனா இரண்டாம் அலையை வெகுவாக குறைத்துள்ளது, திமுக அரசு. இருப்பினும், வரக்கூடிய 3ஆவது அலையினை தடுக்கும் வகையில் முதலமைச்சர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா சொத்து முடக்க விவகாரம்: வழக்கறிஞர் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சென்னை ஆட்சியர்