சென்னை: சென்னை ஐஐடியின் 2022-27ஆம் ஆண்டின் யுக்திகளைக் கொண்ட திட்டத்தை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு உதவும் வகையில் எரிசக்தி நுகர்வை குறைப்பதற்காக, கோட்டக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோட்டக் ஐஐடிஎம் எரிசக்தி சேமிப்பு இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
இளநிலை அறிவியல் படிப்பில், தரவு அறிவியல் பிரிவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டை கட்டமைக்கும் பணிகளுக்காக இதுபோன்ற முன்னெடுப்புகளை தொடங்கியதற்காக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இந்திய தொழில்நுட்பக்கழகங்கள் வெறும் கல்வி நிறுவனங்களாக அல்லாமல், அறிவியல் சார்ந்த சிந்தனைகளை உருவாக்கி மனிதனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கோயில்களாகத் திகழ்கின்றன என்றும், உலக நாடுகள் அனைத்தும் சென்னை ஐஐடியை நாடி வரும் தருணம் வெகு தூரத்தில் இல்லை என்றும் தெரிவித்தார்.
சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப வலிமை காரணமாக 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு சென்னை மாநகரத்தில் குடிநீர் பஞ்சம் இருக்காது!