சென்னை: தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாக தாக்கி பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள், 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உட்பட 124 வனத்துறையினர், 86 காவல்துறையினர், 5 வருவாய் துறையினர் என 215 பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டப்பட்ட அதிகாரிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, மார்ச் 4ம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரடியாகச் ஆய்வு செய்தார். வாச்சாத்தி மலை கிராமத்தில் இருந்து கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலை கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் நேரடியாக விசாரணை செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் இன்று (செப்.29) தீர்ப்பளித்தார். அதில், மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 18 பேருக்கும் அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரோடு இல்லாத பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அது சுய தொழிலாகவோ? அல்லது நிரந்தர வேலையாகவோ இருக்கலாம். இழப்பீட்டு தொகையை 2016ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு 15 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வாச்சாத்தி கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சிஇஓ கிருஷ்ணன் திடீர் ராஜினாமா..! காரணம் என்ன?