போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குகள் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (அக்.22) நடைபெற்ற கூட்டத்தின் மூலம் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.
அதில், "தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன், முதல் தகவல் அறிக்கையைச் சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
விசாரணை அலுவலர்கள் 164 குற்றவியல் சட்டத்தின்படி தேவைப்பட்டால் மட்டுமே, பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வீடியோ பதிவு செய்ய நேரிட்டாலும், காவல்துறை சார்ந்த புகைப்படக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு பெறலாம் என விபரத்தைத் தெரிவிக்க வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத விசாரணை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.