சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 16ஆம் தேதி 46 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காவல் துறையும் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு முறைகளை மேற்கோள்காட்டி, தமிழ்நாடு காவல் துறை டிஜிபி, அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
இந்த சுற்றறிக்கையில், “ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியின்போது யாரும் பாடல்கள் மற்றும் சாதி, மதம் ரீதியாக எந்த கருத்துகளையும் பேசக் கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஈடுபடக் கூடாது.
பேரணியில் கலந்துகொள்வோர் லத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு செல்லக்கூடாது. ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட இடத்தில், அதாவது சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஆக்கிரமிக்க வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
பேரணியில் எந்தவொரு பொது அல்லது தனியார் சொத்துகள் சேதம் அடைந்தால், அதற்கான இழப்பீடு கொடுக்கப்படும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து, எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படாத இடத்தைத் தேர்வு செய்து, சூரியன் மறைவதற்கு முன்னதாக நிகழ்ச்சிகளை முடிக்க அறிவுறுத்த வேண்டும்.
மேலும் பிரச்னைக்குரிய இடங்களில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் போட வேண்டும். நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான திட்டத்தை, வருகிற 15ஆம் தேதி காலை 10 மணிக்குள் டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல் துறை அனுமதி வழங்கவில்லை. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில், சில நிபந்தனைகள் உடன் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும், காவல் துறை இதனை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, சுற்றுச்சுவர் உள்ள மைதானங்களில் நடத்த உத்தரவிட்டார்.
இதனை மேல்முறையீடு செய்த நிலையில், பொது வெளியில் பதற்றமான 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் நிபந்தனைகள் உடன் அனுமதி வழங்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி.. தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி!