கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உயர் அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், சென்னையில் கரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி கே.பி. பார்க், திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடைகுப்பம், இந்திராகாந்தி குப்பம் ஆகிய பகுதியில் உள்ள ஆயிரத்து 472 குடியிருப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்காக அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மொத்தம் ஆயிரத்து 176 குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.
அங்கன்வாடியில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தினமும் மூன்றாயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஊரடங்கு முடிந்த பின் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி இலக்கு!