சென்னை: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், மே 24ஆம் தேதி நான்கு சிங்கங்கள், மே 29ஆம் தேதி ஏழு சிங்கங்கள் என மொத்தம் 11 சிங்கங்களின் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
போபாலில் உள்ள நிஷாட் நிறுவனம், நம் நாட்டில் விலங்குகளில் புதிதாக உருவாகும் நோய்க்கிருமிகள் குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நிறுவனமாகும். விலங்கு மாதிரிகளை பரிசோதிக்க நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நிறுவனங்களில் ஒன்றாகும்.
போபாலின் நிஷாட் நிறுவனம் கடந்த ஜூன் 3ஆம் தேதி தெரிவித்த அறிக்கையின்படி, ஒன்பது சிங்கங்களின் மாதிரிகளில் கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அன்றிலிருந்து விலங்குகள் தீவிர சிகிச்சையில் உள்ளன. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு தொற்று ஏற்படுத்திய கரோனா வைரஸின் மரபணு வரிசைப்படுத்துதலின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அலுவலர்கள் அந்நிறுவனத்திடம் கோரியிருந்தனர்.
இந்தச் சூழலில் இயக்குநர் ஐசிஏஆர்-நிஷாட் தனது முடிவுகளை அறிவித்துள்ளது. அதில், நான்கு சிங்க மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு போபாலில் உள்ள நிஷாட் நிறுவனத்தில் செய்யப்பட்டது. மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் நான்கு சிங்கங்களின் மாதிரிகள் டெல்டா வகையைச் சார்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த டெல்டா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் இறந்துள்ளன' - அமைச்சர் தகவல்