சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு அரசு காவிரி படுகை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. அங்கே ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் அவையில் இப்பிரச்னையை எழுப்பினோம். மேலும் அதற்கு உத்ரவாதம் தாருங்கள் என்றோம். இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. ஆகவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இந்த விஷயத்தில் மாநில அரசு மத்திய அரசின் அனுமதியில்லாமல் செய்கிறதா? அல்லது மாநில-மத்திய அரசுகளுக்கிடையே முரண்பாடு இருக்கிறதா? என்பது மக்களுக்குத் தெரியவேண்டும்.
இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
வெற்று அறிவிப்பு?
இதையடுத்து, ‘இது மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பா?’ என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் காரணங்களுக்காக எதையாவது ஒன்றை அறிவிப்பது நல்ல நிர்வாகம் அல்ல. அறிவிப்பு என்றால் முறையாக அனுமதி பெற்று, மத்திய அரசிடம் உத்ரவாதம் பெற்று அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்பு மத்திய அரசின் ஒப்புதலுடன் இருக்க வேண்டும். மத்திய அமைச்சர்களைக் கேட்டாலும் அந்த அறிவிப்பு நியாயம் என்று சொல்ல வேண்டும்” என்றார்.
விஜய் திமுக தலைவரா?
சமூக வலைதளங்களில் திமுக தலைவர் விஜய் என்று ட்ரெண்டிங் ஆகிறதே? என்றக் கேள்விக்கு, “சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். திமுக பொதுக்குழு கூடி, சட்டத்திட்டத்தின்படி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாங்கள் விஜய்யை தேர்ந்தெடுக்கவில்லை. எங்கள் கொள்கை, போராட்டம் தனி. விஜய் எங்களை ஆதரிக்கிறாரோ தெரியவில்லை. ஆதரவாக இருந்தாலும் அவர் எப்படி எங்களுக்கு தலைவராக முடியும்?
ஆதரவாக பேசும் நடிகர் மீது நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது? எதிர்க்கும் நடிகர் மீதும் நடவடிக்கை தொடர்கிறது. நியாயமான அரசியல் கட்சி என்ன செய்யுமோ? அதைத்தான் நாங்கள் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
கடலிலே தாமரை மலரும்
மேலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கையெழுத்து பற்றி கூறும்போது, “கையெழுத்துகள் தயாராக இருக்கின்றன. நாங்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க தயாராக உள்ளோம். அதற்காக தேதி கேட்டுள்ளோம். பாஜகவை பொறுத்தவரை அவர்கள் உண்மையை பேச மாட்டார்கள். அவர்களை நம்ப வேண்டாம்.
அவர்களிடம் கேட்டால், அவர்கள் கையெழுத்தே வாங்கவில்லை என்பார்கள். நாங்கள் இந்த கையெழுத்து பிரதியை கொடுத்தால், அப்படியொரு சட்டமே கொண்டுவரவில்லை என்பார்கள். அவர்கள் கடலிலே தாமரை மலரும் என்ற நம்பிக்கையோடு வாழ்வார்கள். அந்த நம்பிக்கையோடு வாழட்டும்” என்றார்.
இவ்வாறு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்தார்.
தண்டனை
தொடர்ந்து டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இதனை பாஜகவுக்கு மக்கள் கொடுத்த தண்டனையாகக் கருதுகிறேன்” என்றார்.