சென்னை: எழும்பூர் - கடற்கரை வழிப்பாதை இடையே தற்போது 2 இருப்புப் பாதைகள் உள்ளன. இந்த 2 இருப்புப் பாதையில், ஒன்றில் புறநகர் ரயில்களும், மற்றொன்றில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கூடுதல் ரயில்பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், ரூ.280 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக கோட்டை, பூங்காநகர் ஆகிய ரயில் நிலையங்களில் செடிகள், பழைய தண்டவாளங்கள் என தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது.
இதைத்தொடர்ந்து, ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த பணிகள் தீவிரமடைந்த நிலையில், தற்போது புதிய சிக்கலாக ரிசர்வ் வங்கியின் நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரை - கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் நிலையங்களுக்கு இடையே, ஒற்றை வழித்தடம் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “சென்னை கடற்கரை - எழும்பூர் இடையிலான 4.50 கி.மீ தொலைவுக்கு, ரூ.279 கோடி செலவில் 4-வது ரயில் தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நடப்பு பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பூங்காநகர், கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் பறக்கும் வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டது.
2 ரயில் நிலையங்களில் நடைமேடை சுவர் இடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. கோட்டை ரயில் நிலையத்தில் 3,4,5-வது நடைமேடைகள் மற்றும் நடைமேம்பாலம் அகற்றும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையிலான பறக்கும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பணிக்காக பாதுகாப்புத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களை கையகப்படுத்தி பணி மேற்கெள்ளப்படுகிறது. மேலும் பக்கிங்காம் கால்வாய் இடையே 8 சிறிய மேம்பாலங்கள் வருகின்றன. இதில் 3 பாலப்பணிகள் முடிக்கபட்டுள்ளன. இதேபோல் கூவம் ஆற்றின் இடைய பாலத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை கோட்டை, பூங்கா, பூங்கா நகர் ரயில் நிலையங்களில், நடைமேடை அகற்றும் பணி முடியும் நிலையில் உள்ளது. சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கியின் நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரை - கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் நிலையங்களுக்கு இடையே, ஒற்றை வழித்தடம் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் இதற்கான தீர்வு காணப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மாெழியில் மாெழியாக்கம் செய்யும் சென்னை ஐஐடி..!