சென்னை: தமிழ்நாடு தலைமைச்செயலகச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்.ஆர். என்கிற பெயரில் திமுகவை எச்சரித்த தலைமைச்செயலக தேர்தல் முடிவுகள் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.
தலைமைச் செயலகச் சங்கத் தேர்தலுக்கு துளியளவும் தொடர்பில்லாத செய்தியினை எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி எஸ்.ஆர் என்பவர் வெளியிட்டுள்ளார். தலைமைச் செயலகச் சங்கத் தேர்தலைப் பொறுத்தவரையில், இதில் அரசியல் என்பதற்கு எக்காலத்திலும் எள்ளளவிற்கும் இடமில்லை. தலைமைச் செயலகச் சங்கமானது 1946ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பாரம்பரியம் மிக்க ஜனநாயக அமைப்பாகும்.
தலைமைச் செயலகச் சங்கத்திற்கு கடந்த 23.9.2022அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் நான்கு அணிகள் களத்தில் போட்டியிட்டன. நான்கு அணிகளுமே எந்தவித அரசியல் சார்பில்லாமல், நேர்மையான முறையில் தேர்தலைச் சந்தித்தன. நான்கு அணிகளும் முதன்மையாக வைத்த வாக்குறுதியானது, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதே.
இத்தேர்தலில் தலைமைச் செயலகச் சங்க உறுப்பினர்கள் 83.5 விழுக்காட்டு வாக்குப்பதிவினை செலுத்தி, தற்போதைய நிர்வாகிகளைத் தேர்வு செய்துள்ளனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று தேர்வாகும் நிர்வாகிகள், அரசியல் பின்புலமின்றி தலைமைச் செயலகப் பணியாளர்களின் நலனுக்காகவே பணியாற்றி வந்துள்ளனர்.
ஆதாரமற்ற முறையில் முன்னாள் நிர்வாகிகளின் மீது அரசியல் சாயம் பூசுவதையும், தலைமைச் செயலகப் பணியாளர்கள் அரசியல் பின்புலத்தோடு செயல்படுகிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதையும், சங்கத்தின் மாண்பை களங்கப்படுத்துவதையும் எள்ளளவும் ஏற்க முடியாது.
உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளிட்டு, தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையேயான நல்லுறவினைக் கெடுக்கும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இதனை தலைமைச் செயலகச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உண்மைக்குப் புறம்பான அவதுாறு செய்திகளை வெளியிட்டு அரசுக்கும் தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குமான சுமூகமான உறவினைச் சிதைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.