சென்னை: தீபாவளிப் பண்டிகையொட்டி, அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களின் உடைமைகளை நடமாடும் ஊடுகதிர் வாகனம் மூலமாக காவல் துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகை
நவ.4ஆம் தேதியன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள், பொருள்கள் வாங்குவதற்கு மார்கெட், ஷாப்பிங் மால்களிலும், வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் அதிக அளவு கூடுவதால், சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவும் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், கரோனோ பேரிடர் காலத்தில் கரோனோ தொற்றைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியிலும் சென்னை பெருநகரக் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
புத்தாடைகள், பொருள்கள் வாங்குவதற்காக, சென்னையில் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அக்.29 முதல் நவ.4ஆம் தேதி இரவு வரை சென்னை காவல்துறை சார்பில், பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடமாடும் ஊடுகதிர் வாகனம்
மேலும், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு பேருந்து நிலையம், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, தி.நகர், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன், தாம்பரம் தற்காலிகப் பேருந்து நிலையம், பூந்தமல்லி தற்காலிகப் பேருந்து நிலையம், கே.கே.நகர் தற்காலிகப் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அக்.29 முதல் நவ.4ஆம் தேதி வரை சென்னை காவல்துறைக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நடமாடும் ஊடுகதிர் வாகனம் மூலம் பொதுமக்கள் கொண்டு வரும் உடைமைகள் சுழற்சி முறையில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் BDDS பயிற்சி பெற்ற காவலர்கள் இரண்டு ஷிப்ட்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தச் சோதனையானது தீபாவளிப் பண்டிகை வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி அன்று வரும் மகாவீர் நிர்வான் நாள்: சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!