சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக விளையாட வரும் வீரர்களுக்கு என தனியாக "photobooth" உள்ளது. மேலும் போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கண்ணைக் கவரும் வகையில் "I love Mamallapuram" என்ற செல்ஃபி ஸ்பாட் நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்டோ, வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறது.
போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு உள்ளே செல்வதற்கு முன்பு அங்கு மலர்களால் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவில் ஏறி அமர்ந்து, உற்சாகமாக புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். இந்திய ஆட்டோவில் பயணிப்பது தங்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் வெளிநாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!