வங்கதேசம் டாக்காவைச் சோ்ந்தவா் சலினாபேகம் (53). இதய நோயாளியான இவர் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வர முடிவுசெய்தார். அதன்படி நேற்று (பிப். 27) டாக்காவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ சிறப்பு விமானத்தில் சலினா பேகம் தனது மகன், மகள் ஆகியோருடன் வந்துகொண்டிருந்தார்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சலினாபேகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து விமான பணிப் பெண்கள் விமானிக்குத் தெரிவித்தனா். விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தாா்.
இந்தத் தகவலையடுத்து சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமான நிலைய ஓடுபாதை அருகே தயாா் நிலையில் இருந்தனா். விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் மருத்துவக் குழுவினா் விமானத்திற்குள் ஏறி, சலினாபேகத்தைப் பரிசோதித்தனா். ஆனால் அவா் இருக்கையில் சாய்ந்தபடி உயிரிழந்திருந்தாா். அவா் திடீா் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனா்.
இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் துறையினர் சலினாபேகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். உடற்கூராய்வுக்குப்பின் சலினாபேகத்தின் உடல் மீண்டும் வங்கதேசத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.70.5 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்!