சென்னை: நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்துள்ளன. தேமுதிக, தமகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்து வரும் தோழமை கட்சிகள் நேரில் சந்தித்து, ஆதரவைத் தெரிவிக்க அக்கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளன.
குறிப்பாக, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் சேதுராமன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் உள்ளிட்ட 13 அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார் செய்வது குறித்தும், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த துணை முதலமைச்சரும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் காலில் விழுந்து வணங்கிய கட்சி நிர்வாகி ஒருவரை அவர் அன்புடன் கண்டித்து இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது நிர்வாகிகள் நிரந்தர முதலமைச்சர் என முழக்கங்களை எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.