கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தாக்குதல் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கும் சூழலில், இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடி கவுன்சிலிங் நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட் -19 2ஆவது அலை அச்சம் நிலவும் சூழலில் நேரடி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது ஆபத்தானது! மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கரோனா சோதனை நடத்துவதும், கூட்டத்தைக் குறைக்கும் வகையில் நீண்ட நாட்கள் கலந்தாய்வினை நடத்துவதும், நடைமுறை சாத்தியமா என்பதை அரசு அதிகாரிகளோ- அமைச்சர், விஜயபாஸ்கரோ - ஏன் முதலமைச்சரோ கூட சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.
மாணவர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். அதே போல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையும் மிகவும் முக்கியம். ஆகவே, திமுக- மத்திய- மாநில அரசுகளுக்கு தீவிர அழுத்தம் கொடுத்துப் பெற்றுக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட மொத்த மருத்துவ சேர்க்கையையும் “ஆன்லைன் கவுன்சிலிங்” மூலமே நடத்திட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.