சென்னை: மாரிதாஸ் 'Maridas Answers' என்ற தனது யூ-ட்யூப் பக்கத்தில் 2020ஆம் ஆண்டு காணொலி ஒன்றை வெளியிட்டார். அந்தக் காணொலியில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் குறித்துத் தரக்குறைவாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசியதாக அந்தத் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி வினய் சரவோகி உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் மாரிதாஸை இவ்வழக்கில் கடந்த 11ஆம் தேதி கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மாரிதாஸிடம் விசாரணை நடத்தும்பொருட்டு ஒரு நாள் காவல் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாரிதாஸ் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்த ஒரு நாள் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் மருத்துவப் பரிசோதனை முடிந்து சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வைத்து மாரிதாஸ் விசாரிக்கப்படுவார் எனவும், அதனைத் தொடர்ந்து விசாரணை முடிந்து நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார், மனைவி கைது