தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இந்தாண்டு 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 88 மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அவர்களில் தகுதியான 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 28ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதுகுறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறுகையில், "கடந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்ணை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் சிறிது உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு 2ஆயிரத்து 646 மாணவர்கள் 190 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். நடப்பாண்டில் 3 ஆயிரத்து 445 மாணவர்கள் 190க்கும் அதிகமான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கூடுதலாக 799 மாணவர்கள் 190க்கும் அதிகமாக கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 155 கட் ஆஃப் மதிப்பெண், அதற்குக் கீழ் கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அதிகளவு விண்ணப்பித்துள்ளனர்.
இதனால், இந்தாண்டு கட் ஆஃப் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மத்திய அரசின் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ பிரதான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்க இருப்பதால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான இடங்களை மாணவர்கள் கூடுதலாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கட் ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது'