சென்னை அம்பத்தூர் அருகே அத்திபட்டு பகுதியில் பாரத் பெட்ரோலியம் தனியார் சில்லறை பெட்ரொல் விற்பனை மையம் உள்ளது. அங்கு பெட்ரோல் நிரப்பச்சென்ற சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சோனாலி என்ற வாடிக்கையாளர், பெட்ரோலை நிரப்ப சொல்லியுள்ளார். பெட்ரோல் முழுவதும் நிரம்பியதும் 18.4 லிட்டருக்கு பங்க்கில் ரசீது கொடுத்துள்ளனர். இதையடுத்து பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 15 லிட்டர் என இருக்கையில் 18.4 லிட்டர் நிரம்பியதாக ரசீதை கண்டு சந்தேகித்தார், சோனாலி. எனவே வாடிக்கையாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனத்தில் இருந்த அனைத்து பெட்ரோலையும் மீண்டும் வெளியே எடுத்து அளந்து பார்த்துள்ளனர். அப்போது 15லிட்டர் மட்டுமே இருந்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் சார்பில் பெட்ரோல் டேங்க்கை கழட்டி எடுக்கச்சொன்னதை அடுத்து மீண்டும் டாங்கை கழற்றி பெட்ரோலை எடுத்தனர். அப்போது கூடுதலாக 3 லிட்டர் இருக்கையில் மொத்தம் 18 லிட்டர் இருந்துள்ளது.
ஆனால், குறைந்தபட்சம் 3 லிட்டர் பொட்ரோல் இருந்தால்தான் வாகனம் இயங்கும் என வாடிக்கையாளர் வாதிட்டுள்ளார். இதுகுறித்து வாடிக்கையாளர் கூறுகையில் சுமார் மூன்று லிட்டர் அளவு பெட்ரோல் தனது இருசக்கர வாகனத்தில் இருப்பு முன்பே இருந்ததாகவும் வெறும் 15 லிட்டர் பெட்ரோலை செலுத்திவிட்டு 18.4 லிட்டருக்கு பணம் வசூல் செய்ததாகவும் இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரின் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, 'போடப்பட்ட பெட்ரோலுக்கு தான் பணம் வசூல் செய்ததாக' தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர் பெட்ரோல் குறைவாக போட்டுள்ளதாக பெட்ரோல் பங்கில் வைத்து போடப்பட்ட அனைத்து பெட்ரோலையும் மீண்டும் வெளியே எடுத்தது மட்டுமின்றி, பெட்ரோல் டேங்கை கழற்றி ஒரு சொட்டு விடாமல் எடுத்து அளக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற புகார்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு