சென்னை: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்வதற்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த தேர்வு முறையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்பாடது எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள கியூட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதன்படி, கியூட் நுழைவுத்தேர்வுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள், என்டிஏ இணையதள பக்கத்தில் இருந்து மே 2வது வாரத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தது.
மேலும் இந்த கியூட் தேர்வு வருகிற மே 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் புதிய கல்வி அமர்வு ஆகஸ்ட் முதல் தொடரும் எனவும் யுஜிசி தெரிவித்தது.
இந்த நிலையில், கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண்ணை கட்டாயம் பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய கியூட் விண்ணப்பதாரர்கள் 2021ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஆவர்.
அந்த நேரத்தில் கரோனா ஊரடங்கு இருந்ததால், அப்போது 10ஆம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. இதனால் தற்போது தமிழ்நாட்டில் கல்வி பயின்ற மாணவர்களால் கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
மேலும் இந்த சிக்கலை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என்ற நிலை உருவானது. பின்னர், 10ஆம் வகுப்பு மதிப்பெண் பதிவேற்றுவதற்கு சலுகை அளிக்கப்பட்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜேஇஇ விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சலுகை!