சென்னை: பொங்கல் திருநாளில் ஒன்றான காணும் பொங்கலான இன்று (ஜன.17) 50,000-க்கும் மேற்பட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மொத்தமாக 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு அவர்களது பெற்றோர்களுடைய செல் எண்களை எழுதிய பேண்ட் (வளையம்) குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டது.
சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர் பிரேம் 'ஆனந்த் சின்ஹா' மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பை பார்வையிட்டு ட்ரோன் விடுவதை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’பாதுகாப்புப் பணியில் 2500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் உள்ளனர். மேலும் குற்றங்களைக் கண்காணிப்பதற்காக சிறப்புப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. காணாமல் போகின்ற குழந்தைகளைக் கண்டுபிடிக்க அவர்களின் கைகளில் செல் நம்பர் கொண்ட பேண்ட் கட்டப்பட்டு வருகிறது. இன்று இரவு 9 மணிக்குள் முழுவதுமாக பார்வையாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்’ என்றார்.
இதையடுத்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் பார்வையாளர்களைச் சந்தித்து காணும் பொங்கல் குறித்து மாநகராட்சி மற்றும் காவல் துறை எடுத்த ஏற்பாடுகள் குறித்து கேட்டபோது, "போலீசார் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்திருந்தனர். நாங்கள் நல்ல முறையில் காணும் பொங்கலை மெரினா பீச்சில் கழித்தோம்", என்றார்கள்.
இருப்பினும் கடற்கரையை ஒட்டி தடுப்பு போடப்பட்டிருந்ததால் அவர்களால் கடலுக்குள் போகமுடியவில்லை எனவும்; பெண்களுக்காக தனி கழிப்பறைகள் இல்லை எனவும் சிறிது வருத்தம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஒகேனக்கலில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!