முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் குழந்தைவேலு. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். இந்த நிலையில், அவரது மனைவி ரத்தினம் மட்டும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசித்துவந்தார்.
இவர்களது மகன் பிரவீண், இங்கிலாந்து குடியுரிமைப் பெற்று அங்கேயே வசித்துவருகிறார். சொத்து பிரச்னை காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு பிரவீண் தமிழ்நாடு வந்துள்ளார். தனது தாயிடம் சொத்தை பிரித்துத் தருமாறு பலமுறை பிரவீண் வற்புறுத்தியுள்ளார்.
இதேபோல் சம்பவத்தன்று பிரவீண் சொத்தை பிரித்துத் தருமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரத்தினம் சொத்தைப் பிரித்துத் தரவே முடியாது என திட்டவட்டமாக மறுத்தார். இதனால் கோபமடைந்த பிரவீண் தனது தாய் என்றும் பாராமல் ரத்தினம் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு ரத்தினத்தின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் சென்று பார்த்தபோது, ரத்தினம் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, சாஸ்திரிநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தப்பியோடிய பிரவீணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.