கோவை பாப்பநாயகன் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெட்டி கார்த்தி, அஜீத், சக்திவேல், ராமகிருஷ்ணன், அருண் பாண்டி உள்ளிட்டோருக்கிடையில் கிரிக்கெட் போட்டி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு பெட்டி கார்த்தி உள்ளிட்ட ஏழு பேர் ராஜேஷ்குமாரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த குண்டு வெடிப்புகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கார்த்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2017 ஆகஸ்ட் 24ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பெட்டி கார்த்தி உள்ளிட்ட ஐந்து பேரும் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நிதிபதிகள் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதால், கீழமை நீதிமன்ற தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக்கூறி ஆயுள் தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.