தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான சிப்காட், தமிழ்நாட்டில் மணப்பாறை, திண்டிவனம், மணக்குடி, தூத்துக்குடி (இரண்டாம் கட்டம்), நெமிலி, மாம்பாக்கம், சக்கரக்கோட்டை ஆகிய ஏழு இடங்களில் புதிய தொழில் பூங்காக்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இவற்றில், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் பிரதானமாக அமையவுள்ளன. இந்தப் பூங்காக்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், இவை தவிர வேறு சில திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிப்காட் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் 21 தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய தொழிற்பேட்டைகளுடன் சேர்த்து இங்கு 29 தொழில் பூங்காக்கள் செயல்படும்.
மின்சார வாகன உற்பத்தி மையமாகும் சிப்காட் மணலூர் தொழிற்பேட்டை
திருவள்ளூர் மாவட்டம், குமிடிப்பூண்டி தாலுகாவைச் சேர்ந்த மணலூர் மற்றும் சூரப்பூண்டி ஆகிய பகுதிகளில் 691 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய தொழிற்பேட்டை அமைகிறது. இதில், 90 விழுக்காடு தொழிற்சாலைகள் மின்சார வாகன உற்பத்தி மற்றும் ஆட்டோ மொபைல் உதிரி பாகம் தயாரிப்பு துறையிலும், மீதமுள்ள 10 விழுக்காடு நிறுவனங்கள் மருந்து பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என சிப்காட் மூத்த அலுவலர் ஒருவர் கூறினார்.
இங்கு சின்தடிக் அக்ரலிக் பாலிமர்கள், ரெசின், சின்தெடிக் ஒட்டுகள் (adhesives), மின்சார வாகனங்கள், அதன் உதிரிபாகங்கள், பெட்ரோல் வாகனங்கள், உதிரிபாகங்கள், இஞ்ஜினியரிங் பொருள்கள், நெகிழிப் பொருள்கள் ஆகியவை உற்பத்திசெய்யப்படவுள்ளன.
சென்னை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களது புதிய தொழிற்சாலையைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தங்களது தொழிற்சாலையை விரிவுபடுத்தவும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் கோரிக்கைவைத்ததன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் புதிய தொழிற்பேட்டையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.
இதையும் படிங்க: சுற்றுப்புறச் சூழல், நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய அதிமுக - கனிமொழி குற்றச்சாட்டு