மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆர்.எஸ் பாரதி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடுத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் மனு ஒன்றினை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது,
'மக்களவைத் தேர்தல் நாளில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணியினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அராஜகங்களை நிறைவேற்றியுள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும் உடந்தையாக இருந்துள்ளது. பொன்பரப்பியில் தலித் மக்களைத் தாக்கி வாக்குப்பதிவு செய்ய விடாமல் தடுத்து இருக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் அறைகளுக்குச் சீல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பெண் அலுவலர் ஒருவர் வாக்குப்பதிவு பெட்டி பாதுகாப்பு மையத்திற்குள் சென்று வந்தது காவல்துறையால் கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது குறித்து தனக்குத் தெரியாது என்கிறார். முக்கியமாக அந்த அறைக்கு சீல் வைக்க வேண்டாம் என உத்தரவிட்டது யார் என எங்களுக்குத் தெரியவேண்டும். மாவட்ட ஆட்சியருக்குத் தெரியாமல் இதுபோன்று நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இதுபோன்ற ஒருவர் வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்ட தேர்தல் அலுவலராக இருக்கக் கூடாது. ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்' என்றார்.
பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், 'நடந்துள்ள பல சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆளும் கட்சியினர் ஒரு அணியில் உள்ளனர். மத்தியில் உள்ள மோடி ஆட்சிக்கு ஜனநாயகத்தின் மீது கடுகளவும் நம்பிக்கை கிடையாது. சர்வாதிகாரத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி' என்று சாடினார்.