உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்ட நிகழ்வின்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், " டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதற்குள் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்குமா? 13 ஆம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மத்திய கல்வி நிறுவனமான ஐஐடியில் இந்த இரண்டரை ஆண்டுகளில் ஐந்து மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
மாணவி தற்கொலை குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை விசாரணை நத்தியதாகவோ சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்ததாகவோ தகவல் ஏதுமில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க தயங்குகிறதோ என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தந்தப்பட்ட பேராசிரியர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.
கமலின் அரசியல் அணுகுமுறை வேறு. ரஜினியின் அணுகுமுறை வேறு. இவர்கள் இருவரும் எந்த அடிப்படையில் ஒரு அணியில் இணைந்து செயல்படுவார்கள் என்பது பெரிய குழப்பத்தை தருகிறது. சினிமாவிலிருந்து யாராவது வந்தால் பின்னாடியே போகின்ற அளவுக்கு அரசியல் பார்வையற்றவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒருமித்த கருத்துடன் பாஜக -அதிமுக. கூட்டணியை முறியடிப்போம். மாநகராட்சி, நகராட்சி மேயர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. திருமாவளவன் கோரிக்கையில் நியாமில்லை என்று கூறிவிட முடியாது" என்று தெரிவித்தார்.