சென்னை: தி.நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் அக்கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன் கூறியதாவது, “ஒம்றிய அரசின் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
கரோனாவால் மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட கரோனா மருந்துகளை ஒன்றிய அரசு அனைத்து மாநிங்களுக்கும் வழங்கி வருகிறது. இதில், ஒரு சில மாநிலங்களுக்கு மருந்துகள் வழங்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன் மூலம் பிரதமர் மோடி பாரபட்சத்துடன் நடந்து கொள்வது தெரிகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், “தடுப்பூசி தான் கரோனாவுக்குத் தீர்வு, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் கட்டுகிறார். மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களுக்கு கூடுதலான தடுப்பூசியை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது.
நீதிமன்றங்களே ஒன்றிய அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளது. இதற்காக, பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அரசு முறையாக செயல்பட்டு வருகிறது, பாராட்ட மனம் இல்லாமல் குறை கூறி வருகிறார்” என கூறினார்.
மேலும், “மத்திய அரசைக் ‘ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை, பாஜகவும் அதற்கு அடிமையாக இருக்கும் சிவி சண்முகம் போன்றவர்களுக்கு அது தெரியப்போவதில்லை, அவர்களுடைய பேச்சை ஒரு பொருட்டாக கருத வேண்டாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநில, ஒன்றிய அரசுகளை பாராட்டிய சென்னை உயர் நீதிமன்றம்