சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் மீண்டும் சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று முதியவரை முட்டி தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக சாலையில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகள் பொது மக்களை முட்டி காயப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி டிபி கோயில் தெருவை சேர்ந்த கஸ்தூரி ரங்கன் என்கின்ற முதியவர். இவர் நேற்று (அக்.24) இரவு அதே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கஸ்தூரி ரங்கனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சாலையில் சென்ற முதியவரை முட்டி தூக்கிய மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் சுந்தரம் என்கின்ற முதியவரை அதே பகுதியில் மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்து காயம் அடைந்து சுந்திரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்கின்ற பெண்ணையும் மாடு முட்டி தள்ளியதிதில், காயம் அடைந்து சிகிச்சை பெற்றார்.
அதேப்போல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் தாயுடன் சென்ற குழந்தையை இடைவிடாமல் ஆக்கிரோஷமாக முட்டி தள்ளியது. அக்கம்பக்கத்தினர் விரட்டியும், அந்த மாடு குழந்தையைத் தொடர்ந்து காயப்படுத்தியது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி விரட்டியதில் அந்த மாடு அங்கிருந்துச் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகரிச்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். சாலையில் சுற்றித்திரியும் அனைத்து மாடுகளையும் பிடித்து காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் பிடிப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.
இந்த நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில், தொடர்ந்து மாடுகள் பொதுமக்களை முட்டும் சம்பவத்தால் அப்பகுதியில் இருப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "வாரிசு அரசியல், ஊழலில் ஊறித் திளைக்கும் திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும்" - வானதி சீனிவாசன்!