சென்னை: தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 38 ஆயிரத்து 458 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 61 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 51 லட்சத்து 94 ஆயிரத்து 914 நபர்களுக்கு கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 52 ஆயிரத்து 276 நபர்கள் கரோனா நோய்த்தொற்றுப்பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 730 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 127 நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 521 என உயர்ந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நோய்த்தொற்றுப் பாதிப்பினால் யாரும் இறக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 38 ஆயிரத்து 25 நபர்கள் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 19 நபர்களுக்கும், கோயம்புத்தூர், திருவள்ளூரில் தலா 5 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 9 நபர்களுக்கும், கடலூரில் 4 நபர்களுக்கும் என 61 நபர்களுக்குப் புதிதாகப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை செய்பவர்களில் எண்ணிக்கையில் மாநிலத்தில் சராசரியாக 0.2% நோய்ப் பரவல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் 19 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.