ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாதோ. இவருக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதலாகவே கரோனா பெருந்தொற்று தொடர்பான அறிகுறிகள் இருந்துள்ளன. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனோ உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், சென்னை எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை தொடர்பு கொண்டுள்ளனர்.
தகவலறிந்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர் குழு சில நாள்களுக்கு முன்பு ராஞ்சி விரைந்தது. அங்கு அவரை பரிசோதனை செய்தபோது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது. அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ராஞ்சியில் இருந்து மாலை 5 மணிக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இன்று (அக்.,19) சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட அவரை எம்ஜிஎம் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்றுகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!