கோவையில் செயல்பட்டுவந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடமிருந்து 11 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 260 ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வினை மேற்கொண்டது.
இதையடுத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள் தங்கள் நிறுவனத்திற்கெதிராக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கினை ரத்து செய்யக்கோரியும் அந்நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தங்களது நேர்மையை வெளிப்படுத்த நான்கு வாரங்களில் இரண்டு கோடி ரூபாயை செலுத்துவதாகவும் (டெபாசிட்), மீதித் தொகையை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையின் அடிப்படையில் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வெங்கடேஷ், தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், முதலீட்டாளர்களுக்கு ஆறு மாதங்களில் மீதமுள்ள பணத்தை திருப்பிக் கொடுப்பதை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழுவை அமைத்தும் உத்தரவிட்டார்.
இந்தக் குழுவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆகியோரையும் நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.