தஞ்சாவூர்: தஞ்சை அருகே விடுதியில் தங்கிப் பயின்ற மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டை, ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 35 பேரை தேனாம்பேட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டோரில் மூவர் சிறுவர்கள் ஆவர். இதனையடுத்து சிறுவர்கள் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 32 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலி முகவரி, பெயர்
இதில் கைதுசெய்யப்பட்ட 12 பேர் போலி பெயர், முகவரியைக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 12 பேர் மீதும், மேலும் ஐந்து பிரிவுகளின்கீழ் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 பேரும் பிணை கோரி மனு தாக்கல்செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 17) எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது ஏபிவிபி அமைப்பினருக்காக வழக்கறிஞர் பால்கனகராஜ், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வாஷிங்டன் ஆகியோர் ஆஜராகினர். இதில் கைதுசெய்யப்பட்டோரில் 12 பேர் வேண்டுமென்றே தவறான பெயர்கள், போலி முகவரிகளைக் கொடுத்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
ஆதார் சமர்ப்பிப்பு
இதற்கு கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் தேர்வு எழுதவுள்ளனர், சிலரின் புனைப்பெயரே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களின் ஆதார் அட்டைகளையும் சமர்ப்பிக்கத் தயார் என ஏபிவிபி தரப்பு வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களின் அடையாள அட்டைகளை நீதிமன்றத்தில் நாளை (பிப்ரவரி 18) வழங்க உத்தரவிடப்பட்டது. வழக்கு தொடர்பாக, காவல் துறை தரப்பில் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: குரூப்-2, 2ஏ தேர்வுகள் தேதி நாளை அறிவிப்பு... டிஎன்பிஎஸ்சி...