சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என 2019ஆம் ஆண்டு அய்யம்பெருமாள் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல்செய்திருந்தார்.
அதில், "அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வடிவதால் நோய்த்தொற்று அபாயம் உள்ளது.
திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில், மடிப்பாக்கத்துக்கு 160 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆகையால் திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கி டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இரண்டு நாள்களுக்குள் முடிவு
இருப்பினும் பணிகள் முடிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர், செயற்பொறியாளர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று (பிப்ரவரி 2) விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் ஆஜராகி, டெண்டருக்கு அனுமதி கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டு நாள்களுக்குள் டெண்டருக்கு அனுமதி கோரிய கடிதம் குறித்து, மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் அனுமதி பெற்ற பிறகு 10 நாள்களுக்குள் டெண்டர் நடவடிக்கையை முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த முறை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துக்கள் முடக்கம்