சென்னை: கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது தொற்றின் தாக்கம் தணிந்துவரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க கோரியும், கோயில்களைத் திறக்க உத்தரவிடக் கோரியும், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக இரு பொது நல வழக்குகளைத் தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இது சம்பந்தமாக மாநில அரசு முடிவெடுக்கும் எனவும், கரோனா மூன்றாவது அலை இடர் உள்ள நிலையில், உடனடியாக இயல்புநிலைக்குத் திரும்ப முடியாது எனவும் இரு அடங்கிய அமர்வு தெரிவித்தது.
மேலும், ஊரடங்கு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ள போதும், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன எனவும் தெரிவித்த நீதிபதிகள், நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அரசு அறிவிக்கிறது என்பதால் அதில் தன்னிச்சையான செயல்பாடு எதுவும் இல்லை எனவும், இந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெளிவுபடுத்தினர்.