சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல்காதர். பேன்சி ஸ்டோர் நடத்திவரும் இவர் லீசுக்கு வீடு தேடிவந்துள்ளார். புரோக்கர் கமிஷன் இல்லாமல் நோ புரோக்கர்.காம் என்ற இணையதளத்தில் தேடிவந்த இவருக்குக் கடந்த ஜனவரி மாதம் ரவி-அமுதா என்ற தம்பதி பதிவிட்டு இருந்த வீட்டைப் பார்த்து 15 லட்சம் ரூபாய்க்குப் பேசி முடித்துள்ளார்.
முதல் தவணையாக 8 லட்சமும், இரண்டாவது தவணையாக 7 லட்சமும் என காசோலையாக அளித்துள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட தம்பதியினர் அப்துல் காதர் பெயருக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். ஒருமாதம் ஆகியும் வீட்டைத் தராமல் வேறு காரணங்கள் கூறி மறுத்துவந்துள்ளார்.
இது குறித்து அப்துல் காதர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் இவர்கள் ஒரே வீட்டைப் பல பேருக்கு லீசுக்கு தருவதாகப் பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. ஒரே வீட்டைப் பலருக்குக் காட்டி 15 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரை ஒவ்வொருவரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அக்ரிமெண்ட் போட்ட பின்பு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வீட்டைத் தராமல் இருந்துவந்துள்ளார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் சாக்குப் போக்கு சொல்லித் தட்டி கழித்துவருவார்.
காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ஏற்கனவே இந்தத் தம்பதி மீது இதே போன்று மூன்று புகார்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் டி.நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவி-அமுதா தம்பதியினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: ரூ. 64 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் இருவர் கைது!