சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 212 இடங்கள் உள்ள நிலையில், வெறும் 47 பேர் மட்டுமே தகுதி பெற்றிருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
சிறப்புப் பிரிவினர்களான முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடி முறையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நாளை காலை 9 மணிக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில், 10 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பிடிஎஸ் இடங்களும் உள்ள நிலையில், 50 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு பிரிவில் 7 எம்பிபிஎஸ் இடங்கள், ஒரு பிடிஎஸ் இடங்களுக்கு 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில், எம்பிபிஎஸ் படிப்பில் 212 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 9 இடங்களும் உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாகவே 47 பேர் மட்டுமே தகுதி பெற்று இருக்கின்றனர். சிறப்புக் கலந்தாய்வுக்கு 147 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தொகுதி பெற்றுள்ள 47 பேருக்குமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பது உறுதி ஆகியுள்ளது. மொத்த இடங்களை விட , தகுதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் என மருத்துவக்கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களை துன்புறுத்தும் பிராங்க் யூடியூப் சேனல்கள்; போலிசில் புகார் அளித்தவருக்கு மிரட்டல்