சென்னை: சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சொத்து வரிக்கான ஊக்கத் தொகை தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919க்கு, அரசால் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இச்சட்டத் திருத்தம் அரசாணையின்படி, 2019அம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அரசால் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, அரையாண்டு தொடங்கிய முதல் 15 தினங்களில், சொத்து உரிமையாளர்களால் செலுத்தப்படும் சொத்து வரியில் ஊக்கத் தொகையாக ஐந்து விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.5000/- வரை) அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நடப்பு நிதி ஆண்டின் (2020-21) இரண்டாம் அரையாண்டில் அக்டோபர் 10ஆம் தேதி வரை சொத்து வரி செலுத்திய 5லட்சத்து 18ஆயிரத்து 286 சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்பட்ட சொத்து வரியிலிருந்து, ரூ.4.56 கோடி ஊக்கத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டத் திருத்தத்தின்படி, அரையாண்டு தொடங்கிய முதல் 15 தினங்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியுடன் கூடுதலாக ஆண்டிற்கு இரண்டு விழுக்காடு மிகாமல் தனிவட்டி விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, சொத்து உரிமையாளர்கள், நடப்பு நிதி ஆண்டின் (2020-21) இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை குறிப்பிட்ட காலத்திற்குள்; அதாவது, அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்" என தெரிவிட்கப்பட்டது.