சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மூன்றில் ராம்கி என்ற நிறுவனமும், ஏழு மண்டலங்களில் உர்பேசர் சுமித் என்ற நிறுவனமும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று(டிச.28) மேயர் பிரியா தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில், இந்த இரண்டு நிறுவனங்களும் தூய்மைப் பணிகளை முறையாக செய்வதில்லை என மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
முதலில் பேசிய மாமன்ற உறுப்பினர் கீர்த்தி, 'ராம்கி நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள் பணி செய்கின்றனர்? எத்தனை வீடுகளுக்கு தூய்மை பணியை மேற்கொள்கிறார்கள்? என்ற எந்த விவரமும் முறையாக தெரிவிப்பதில்லை என்றும், மாமன்ற உறுப்பினர்களுக்கு கூட முறையாக பதிலளிப்பதில்லை' என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, "3 மண்டலங்களில் ராம்கி நிறுவனம் தூய்மை பணிகளை செய்து வருகின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இந்த விவகாரத்தில் நேரடியாக கண்காணிப்பு செய்வார்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர் கிரிதரன், தென் சென்னை மற்றும் மத்திய சென்னையில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் உர்பேசர் சுமித் என்ற தனியார் நிறுவனமும் சரிவர செயல்படுவதில்லை என்றும், காலையில் பலர் பணிக்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பணியாளர்கள் இல்லை என்றும், பணியாளர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக உர்பேசர் சுமித் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என்று மேயர் பிரியா பதிலளித்தார்.
இதையும் படிங்க: மேயர் பிரியா தலைமையில் 80-ல் 79 தீர்மானங்கள் நிறைவேற்றம்: என்னென்ன?