கரோனா தொற்று பரவிவரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர், அத்தியாவசியப் பணிகளில் உள்ள காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாரயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”கரோனோ தொற்று தடுப்புப் பணியில் முதன்மை நிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ ஆய்வகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு பிபிஇ முழு கவச உடையை அணிவது, அதைப் பயன்படுத்திய பின் பாதுகாப்பாக அகற்றுவது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கைகளைச் சுத்தமாக வைப்பதற்குத் தேவையான கிருமி நாசினி, சோப் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை இல்லை. தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தினந்தோறும் 15 ஆயிரம் பிபிஇ முழு கவச உடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஷிப்ட் அடிப்படையில் 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் காவல் துறையினர் 7 ஆயிரத்து 850 பேருக்கு முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனோ வார்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், முழு கவச உடை மற்றும் என் 95 முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்தர கையுறை, ஷூக்கள், முழு கவச உடைகள் ஆகியவை வழங்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மனுதாரர் தாக்கல் செய்த அறிக்கையில், ”மருத்துவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்படி மூன்றடுக்கு பாதுகாப்பு ஆடை கொடுக்கப்படவில்லை. மொத்தத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டது பிபிஇ கிட்டே கிடையாது. அது வெறும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மேலுடை தான். ஆனால், அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இதுகுறித்த சரியான தகவல்கள் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து போதுமான விளக்கம் அளிக்க அரசுத் தரப்பில் ஒரு வார காலம் அவகாசம் கோரியதன் அடிப்படையில், வழக்கை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா சோதனைகளை அதிகரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்!