தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சாலைப்பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம் குறித்து பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள், சாலை பணிகள், தெருவிளக்குகள், அனைவருக்கும் வீடுகள் போன்ற பணிகளின் நிலை குறித்தும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் குறித்தும், அடைப்புகள் உள்ள குழாய்களை புதுப்பிக்கும் நடவடிக்கை குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் குறித்தும், நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம், திட்டப்பணிகள் குறித்தும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்கும் நிலை, புத்தாக்கப் பயிற்சி புத்தகப் பராமரிப்பு குறித்தும், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலம் 2019-20 முடிய உள்ள நிலுவை இலக்கு, 2020-21 ஆண்டு இலக்கை அடைய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அமைச்சர் விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் 2019-20ஆம் ஆண்டில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள், குட்டைகள் மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடித்து பணியினை துரிதமாக செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.
நகர்ப்புறங்களில் உள்ள 168 வீடற்றோர்களுக்கான உறைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 6 ஆயிரத்து 363 வீடற்றவர்களுக்கு இதுவரை நகர்ப்புற மேம்பாட்டு இயக்க நிதியின் மூலம் ரூ.190 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் பணிபுரிய தமிழ்நாட்டின் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதாரப் பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பயிற்சி பெற்ற 238 நபர்கள் தற்பொழுது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 தடுப்பு பணியில் 13 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் மாத ஊதியம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர். சுகாதாரப் பிரிவில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயிற்சி நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் முகக்கவசங்கள் தரமான, குறைந்த விலையில் ஒரு கோடி முகக்கவசங்கள் தயாரித்து வழங்கவும் கூட்டத்தில் அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) மூலம் அதிக எண்ணிக்கையில் 14.33 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டு அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இச்செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக திறன் பிரிவிலிருந்து பாராட்டு கடிதம் வரப்பெற்று அதில் உரிய நேரத்தில் மாநில அரசினை அழைத்து கௌரவித்தார்கள் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ‘பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமையை மத்திய அரசு தடுக்கிறது’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு