சென்னை: தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
கரோனா நிவாரணம்
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழர் நலன்கருதி முகாமிற்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, சுமார் நான்காயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஐந்து கோடியே 42 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 13 ஆயிரத்து 553 குடும்பங்கள் பயனடையும். இத்திட்டம் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்" என்றார்.
முதலமைச்சருக்கு நன்றி
’முகாமிற்குள் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பத்திற்கு மட்டுமின்றி, முகாம்களுக்கு வெளியே வாழும் தமிழர்களையும் கருத்தில்கொண்டு நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி’ என பயனாளி செல்வராஜ் மனமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 60 ஆயிரமாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு