கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் அவசரகால பயன்பாட்டிற்காக ஃபவிபிராவிர் (Favipiravir), ரெம்டெசிவிர் (Inj remdesivir), டோசிலிசுமாப் (Tocilizumab) ஆகிய மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, கிலியட் சயின்ஸின் உரிமத்தின் கீழுள்ள ரெம்டெசிவிர் மருந்திற்கு இந்திய மருந்து நிறுவனங்களான சிப்லா, ஹெட்டெரோ, மைலன் ஆகியவை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் ஒப்புதல்களைப் பெற்றுள்ளன.இந்த ஒப்புதல் கரோனா பாதித்த நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆசுவாசத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், கள்ளச் சந்தை மாஃபியாவும் இந்த மருந்து வியாபாரத்தைக் கையில் எடுத்தது.
கிலியட் நிறுவனத்தின் தயாரிப்பான ரெம்டெசிவிருக்கு ஏற்பட்ட கிராக்கியால் இது கள்ளச் சந்தையில் சக்கைப் போடு போட்டுவருகிறது. இது குறித்து ஈடிவி பாரத் டெல்லியில் நடத்திய ஆய்வில், “முதலில் கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தின் விலை 15,000 ரூபாய் என்று கூறப்பட்டது. மருந்து வாங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்ட மறுநாள் அதன் விலை 35,000 ரூபாயாக உயர்ந்தது. ஒரு சில நாள் கழித்து அதன் விலை 27,000 ரூபாய் என்றிருந்தது. ‘ரெம்டெசிவிர்’ மருந்து தங்கத்தின் விலையை விட ஏற்ற இறக்கங்களுடன் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது” என தெரிய வந்தது.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகம் மூலம் டோசிலிசுமாப், ரெம்டெசிவிர், ஈனாக்ஸ்பெரின் ஆகிய மருந்துகள் இதுவரை 1000 குப்பிகள், 1100 குப்பிகள் மற்றும் 1,00,000 குப்பிகள் முறையே தமிழ்நாடு அரசு மருத்துவமனை சிகிச்சைகளுக்காக பெறப்பட்டன. இந்த மருந்துகள் சென்னையிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கரோனா பாதிப்பில் தீவிர பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு பயன்படுத்துவதாக நம்பகத்தகுந்த மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தனியார் மருத்துவமனைகளில் நிலைமை வேறு மாதிரி இருப்பதாகக் கூறப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர நிலைக்கு செல்லும் நோயாளிகளை காப்பாற்ற இம்மருந்துகள் கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
இது குறித்து சில மருத்துவர்களிடம் விசாரித்த போது, “ டோசிலிசுமாப் 40 ஆயிரம் ரூபாய், ரெம்டெசிவிர் (சிப்லா) 4 ஆயிரம் ரூபாய், ரெம்டெசிவிர் (ஹெட்ரோ) 5 ஆயிரத்து 440 ரூபாய், ஃபவிபிராவிர் 103 ரூபாய் என இருந்த விலைப்பட்டியல், தற்போது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகள் பயன்படுத்தத் தொடங்கியதும் கடுமையான விலையுர்வைச் சந்தித்தது” என்றனர்.
இந்த மருந்துகள் அனைத்தும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகளாக இருந்தாலும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து விட்ட நிலையில் இவை கிடைப்பதில் என்ன பாதிப்பு என ஈடிவி பாரத் சார்பில் விசாரித்தோம். அப்போது கிடைத்த தகவல்களின் படி, இந்தியாவில் கரோனா பாதிப்பிற்கு இதுதான் தடுப்பு மருந்து என உறுதி செய்யப்படால் சோதனை கட்டங்களில் மட்டுமே இருக்கிறது. இதனால் தான் அரசு நேரடியாக மருந்துகளை வாங்கி வைத்துள்ளது.
தனியார் மருந்து நிறுவனங்கள் இவற்றை மொத்தமாக பெற்று கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றதோ என்கிற சந்தோகம் உள்ளது என்கின்றார் மருந்து விற்பனை துறையில் இருக்கும் நபர் ஒருவர். அவ்வாறு உயிர் காக்கும் மறுந்துகளை மொத்தமாக பெற்று கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது சட்ட விரோதம். என்வே இது பற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர காவல்துறையினரிடம் கேட்டபோது, "குறிப்பிட்ட அந்த மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக எங்களுக்கு எந்தப் புகார்களும் இதுவரை வரவில்லை. இருப்பினும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்
மருந்து தட்டுபாடு தொடர்பான சம்பவங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவர் ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அங்கும் முறையான சிகிச்சை இல்லை என ஆடியோ வெளியிட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் ஜூலை 27ஆம் தேதி உயிரிழந்தார். இதேபோல் கோவையில் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தடுப்பு மருந்துகள் இல்லாததால், உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலாளர் சாந்தி கூறுகையில், ”அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் தடுப்பு மருந்துகள் இருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவை சென்னையில் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளது. அதே சமயம் பிற மாவட்டங்களில் அதிகமாக இருப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் அரசின் கோவிட் தடுப்பு சிகிச்சை மையங்கள் நிறைந்த நிலையில், பலரும் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பு மருந்துகள் எளிதாக கிடைக்கும் நிலையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்கிறார்.
கோவாக்சின் போன்ற இந்திய தடுப்பு மருந்துகள் சோதனைகள் முடிவுற்று நடைமுறைக்கு வர சில காலம் ஆகும். தற்போதைய தடுப்பு மருந்துகள் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆகவே கரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அணுகுவது நல்லது என்கின்றனர் தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்கள்.
கரோனாவுக்கு அதிகாரப்பூர்வமாகத் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தி உறுதிப்படுத்தும் வரை கள்ளச்சந்தையில் பல லட்சங்கள் செலவு செய்து கரோனா தடுப்பு மருந்துகள் வாங்கும் அவல நிலை தொடரும் வாய்ப்புள்ளது. இதனை ஒழிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் சரியான விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு